
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் வெளி நாடு, வெற்றிலை, வணிகர்கள் என்று அவர்களது தொழில்கள் அமைந்துள் ளன. தமிழகத்தின் மிகச்சிறந்த மார்க்க கல்லூரியான ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி இங்கு இருப்பது மிகச் சிறப்பாகும். இக்கல்லூரி பல மார்க்க அறிஞர்களை உருவாக்கி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேலும் 13 மஹல்லாக்களை ஒன்றிணைத்து 52 உறுப்பினர்களைக் கொண்டு முஸ்லிம் ஜமாஅத் கட்டுக்கோப்புடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத், கான்காஷ்யே பைஜியா என்ற இருதரப்பின் மோதலில் போலீஸாரின் அத்துமீறலால் முஸ்லிம் களின் அமைதி கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளது. இந்த மோதலின் பின்னணி யில் இருப்பது சஜ்ஜாத் என்றும், சர்கார் என்றும் அழைக்கப்படும் அப்துல் பஷீரின் புதைக்கப்பட்ட இடத்தில் சந்தனம் பூசுதல், பூச்சாட்டுதல், மாலை அலங்காரம் செய்து கொடியேற்றுதல், கவாலி பாடுதல் போன்ற நிகழ்ச்சிக்கு கான்காஷ்யே பைஜியா ஏற்பாடு செய்தது. மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபட்டதால், ஒட்டு மொத்த முஸ்லிம் ஜமாஅத் எதிர்ப்பலை யால் கடந்த இரண்டு வருடங்களாக லால்பேட்டையில் கடையடைப்பு போன்ற நிகழ்ச்சியால் சந்தனம் பூசுதல், கொடி ஏற்றுதல், கவாலி பாடுதலை நிறுத்தியுள்ளனர்.
(தாக்குதலுக்குள்ளான தமுமுக ஆம்புலன்ஸ்)

சர்கார் என்று அழைக்கப்படும் அப்துல் பஷீர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பந்துருத்தியிலிருந்து தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் லால்பேட்டையில் உள்ள ஜே.எம்.ஏ. அரபிக் கல்லூரியில் கணக்குப் பிள்ளை வேலைக்கு சேர்ந்தார். பிறகு 2 வருடம் பணிபுரிந்த அவர் பிறகு சிதம்பரம் தபால் நிலையத்தில் ஊழியராக இருந்தார். இந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நூரிஷா மௌலானா விடம் முரீது(?) பெற்ற அப்துல் பஷீர் தனது பேச்சாற்றலால் தனது சகாக்களை அப்பகுதியிலும், சுற்றுப் புற பகுதியிலும் வளர்க்கத் தொடங்கினார். மேலும் அவரது சகாக்கள் அப்துல் பஷீரின் கால்களை கழுவியும், அவரது எச்சிலை விழுங்கியும் தங்களது குருவிற்கு நன்றிக்கடன் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தவறான முறையில் பொருள் ஈட்டியதாலும், மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் அப்துல் பஷீர் ஈடுபட்டதாலும், நடவடிக்கை எடுக்கப்பட்டு முஸ்லிம் ஜமாஅத் அவரை விட்டு விலகியே இருந்துள்ளனர். அப்போது அப்துல் பஷீர் கடை வீதியில் உள்ள பகுதியில் கூரைபோட்டு தனது குடும்பத்துடன் வாழ்ந்த நிலையில் சில ஆண்டுகள் கோமாவில் இருந்த அப்துல் பஷீர் கடந்த 2005 ஆண்டில் இறந்தார்.

அப்துல் பஷீர் இறந்த உடன் அவரது மகன்கள் அவரின் உடலை ஒரு வியா பார நோக்கத்துடன் தங்களது வீட்டினுள் புதைத்து விட்டனர். வீட்டினுள் புதைத்ததால் முஸ்லிம் ஜமாஅத் ''பேரூராட்சி நிர்வாகத்தில்'' நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதுசம்பந்தமான பிரச்சனை நிலுவையில் இருந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு அப்துல் பஷீர் மகன்கள் மற்றும் வெளியூரைச் சேர்ந்த சகாக்களுடன் மார்க்க நடைமுறைக்கு விரோதமாக அப்துல் பஷீர் புதைக்கப்பட்ட இடத்தில் சந்தனம் பூசுதல் விழாவை நடத்த முயன்றனர். முஸ்லிம்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளானதால் அந்த ஆண்டு குர்ஆன் ஓதும் நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றது. அதுபோல் 2007ம் ஆண்டிலும் உயர்நீதிமன்ற உத்தரவுடன் 3 நாட்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு தனது தகப்பனார் சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியை நடத்த முற்பட்டபோது, முஸ்லிம்கள் மற்றும் இதர மக்கள் புறக்கணித்தும், மதசம்பந்தப்பட்ட விஷயங்களில் போலீஸ் தலையீட்டைக் கண்டித்தும் பொது கடையடைப்பு நடத்தி தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் அப்துல் பஷீர் என்பவர் ஒரு சாதாரண தனி மனிதர், அவர் ஒரு மௌலவி இல்லை, எந்த அரபிக் கல்லூரியிலும் படித்த மத போதகர் பட்டம் பெற்றவர் கிடையாது. மௌலவி பட்டம் பெற்றவர்களுக்கு கூட இதுபோன்ற மத சடங்கு செய்யப்படுவது கிடையாது. வக்பு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட கபரஸ்தான் இருந்தும், குடியிருப்பு வாழும் இடத்தில் புதைத்து அதற்கு சந்தனம் பூசுதல், கொடியேற்றுதல் விழாவைத் தவிர்த்து அவர்கள் தகப்பனாருக்கு செய்ய விரும்பும் காரியத்தில் எங்களுக்கு அதிருப்தி கிடையாது என்று மாவட்ட நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முஸ்லிம் ஜமாஅத்திற்கு ஆதரவாக கடந்த 22.07.2008 அன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை அறிந்த லால்பேட்டை ஜமாஅத் இளைஞர்கள் 22.07.2008 அன்று மாலை கடைத் தெருவுக்குச் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அப்துல் பஷீர் சந்தன பூசுதல் நிகழ்ச்சிக்காக வீட்டில் போடப்பட்டிருந்த பந்தல்களை கழட்டியுள்ளனர். அப்போது திடீரென அப்துல் பஷீர் மகன்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்த இளைஞர்கள் மீது சோடா பாட்டில்களை வீசியுள்ளனர். அப்போது படுகாயம் அடைந்த இளைஞர்கள், அப்துல் பஷீர் ஆதரவாளர்களின் கார்கள், மோட்டார் சைக்கிள், கடைகள் என உடைத்ததால் பதட்டம் நிலவியது. காவல்துறை, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அதிரடிப்படையின் மூலம் போலீஸ் தடியடி நடத்தி சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கடைத் தெரு, பஜார், வடக்குத் தெருவில் இருந்த முதியவர்கள், சிறியவர்கள், நோயாளிகள், வழிபோக்கர்கள் என அனைவரும் தடியடியால் பலத்த காயம் ஏற்பட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தடியடி நடத்தி காயம் பட்டவர்களை தமுமுக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது அதிரடிப் படையினர் தமுமுக ஆம்புலன்ஸ் வாகன கண்ணாடியையும் சேதப்படுத்தியுள்ளனர்.
அப்துல் பஷீர் மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பாவிகள், உலமாக்கள், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட 32 பேரை கைது செய்தும், 1065 பேர் மீது வழக்குப் பதிவு செய்தும் முஸ்லிம்கள் மீது காவல்துறை கறுப்பு ஆடுகள் தங்களது கடமையை(?) செய்துள்ளன. தகவல் அறிந்த தமுமுக மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து லால்பேட்டையில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் செயலாளரும், மதரஸா நிர்வாக சபை செயலாளருமான ஏ.ஜே. அஹ்மதுல்லாஹ் கூறியதாவது:
''அப்துல் பஷீர் வெளியூரிலிருந்து எங்களது ஊருக்கு பிழைக்க வந்தவர், அவர் அவரது வழியில் சென்றாலும் ஊரோடு ஒத்து போயிருந்தார். கடந்த 2005ம் ஆண்டு இறந்தபொழுது அவரது வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அப்பொழுது அதன் உள்நோக்கம் தெரியவில்லை. கடந்த 2006ம் ஆண்டு உரூஸ் செய்வதை எதிர்த்து, இது ஷரீஅத் சட்டத்திற்கு (மார்க்கத் திற்கு) முரணான செயல் என்று கண்டித் தோம். அதன்பிறகு அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பொழுது, உரூஸ் நடத்தவில்லை, சமாதானமாகப் போகி றோம் என்று நீதிமன்றத் தில் உறுதியளித்தனர். லால்பேட்டையிலும் தர்ஹாக்கள் இருக்கி றது, அதில் சந்தனம் பூசும் விழா வைப்ப தில்லை. 140 வருடங்களுக்கு மேலாக மதரஸா இருக்கிறது. மார்க்கத் தீர்ப்பு ('பத்வா') வழங்கி உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்து வருகிறது. ஷரீஅத்திற்கு மாற்றமாக எந்த செயலும் லால்பேட்டையில் இடம்பெறக் கூடாது என்ற நோக்கத்துடன் மேலும் ஒரு தர்ஹா உருவாகிவிடக் கூடாது என்று விழிப்புணர்வுடன் இருந்து வருகிறோம். லால்பேட்டையில் அமைதி திரும்ப தமுமுக தொடர்ந்து முயற்சித்து வருகிறது'' என்றார்.
லால்பேட்டை ஜே.எம்.ஏ. அரபிக் கல்லூரியின் துணை முதல்வரும், மாவட்ட ஜமாஅத்துல் உலமா தலைவரு மான ஏ. நூருல் அமீன் கூறியதாவது:
''சம்பவத்தன்று மாலை கும்பகோணம் உலமாக்கள் செயற்குழு கூட்டத்தில் இருந்தோம். ஆனால் உலமாக்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்துள்ளார்கள்'' என்றார்.
தேசிய லீக் மாநில துணை பொதுச் செயலாளரும் பேரூராட்சி தலைவரு மான இம்தாதுல் உசேன் கூறியதாவது:
''கடந்த 14ம் தேதி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கபரஸ்தான் நீக்கம் சம்பந்தமான தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம். அதை எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ளதால் கருத்து தெரிவிக்க முடியவில்லை'' என்றார்.
இதுகுறித்து அப்துல் பஷீர் மகன் நூருல்லாஹ்வை சந்திக்க இரண்டு முறை முயற்சித்த போதும் கருத்து தெரிவிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.
இதுகுறித்து தமுமுக மாவட்டச் செயலாளர் ஷேக்தாவூது கூறியதாவது:
''கடந்த 2 ஆண்டுகளாக சந்தனம் பூசும் விழா நடத்த மாட்டோம் என எழுதிக் கொடுத்துவிட்டு ஜமாஅத்திற்கும் மார்க்கத்திற்கும் எதிரான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருதரப்பின ருமே சமுதாய மக்கள் தான், மேலும் யார் யாரெல்லாம் அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்களோ அவர் கள் மீதெல்லாம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லால்பேட்டையில் அமைதி திரும்ப உதவவேண்டும் என்றும், அப்பாவிகள் கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் ஜமாஅத், தமுமுகவுக்கு கோரிக்கை விடுத்ததால் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரை (எஸ்.பி.) சந்தித்து தமுமுக நிர்வாகி கள் இதுகுறித்து பேசினார் கள். இதன்பிறகு மேலும் கைது நடவடிக்கைகள் எடுக்கமாட்டோம் என்று எஸ்.பி. உறுதியளித்ததன் பேரில்தான் லால்பேட் டையிலிருந்து வெளியேறிய பலரும் மீண்டும் ஊர் திரும்பினர். இருதரப் பினரும் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதால் அமைதி திரும்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைது செய்யப்பட்ட அப்பாவிகளை வெளியே கொண்டுவர முழுவீச்சில் மாவட்ட நிர்வாகிகள் செயலாற்றி வருகிறார்கள்.
சம்பவத்தின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமுமுக ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதியளித்துள்ளது'' என் றார். எது எப்படியோ, சமுதாய மக்கள் மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடாமலும் தங்களுக்குள் அடித்துக் கொள்ளாமலும் ஒற்றுமையாக வாழும் வழியை ஏற்படுத்துவதே இன்றைய நிலையில் அவசியத்திலும் அவசியம்.
No comments:
Post a Comment